பாகிஸ்தான்
ஆதரவுடைய ஹேக்கர் குழுக்கள் குறிப்பாக பாடசாலைகள் மற்றும் முன்னாள் இராணுவ
வீரர்களுடன் தொடர்புடைய இந்திய இராணுவ வலைத்தளங்களை ஊடுருவுவதில் தீவிரமாக
ஈடுபட்டுள்ளன. ஈடி (ET) ஊடக அறிக்கையின்படி, ஆர்மி பப்ளிக் பாடசாலை நக்ரோட்டா, சஞ்சுவான் மற்றும் ஆர்மி இன்ஸ்டிடியூட்
ஒப் ஹோட்டல் முகாமைத்துவம் போன்ற வலைத்தளங்கள் அண்மைய தாக்குதல்களில் இலக்கு
வைக்கப்பட்டுள்ளன. இந்த வலைத்தளங்களின் முகப்புப் பக்கங்கள் பஹல்காம் தாக்குதலில்
பாதிக்கப்பட்டவர்களை கேலி செய்யும் விதமாக மாற்றப்பட்டுள்ளன. இதற்கு பதிலடியாக, 'இந்தியா சைபர் போர்ஸ்' என்ற இந்திய ஹேக் செயற்பாட்டாளர் குழு, பாகிஸ்தான் அரசாங்கம் மற்றும் தனியார்
துறை தரவுத்தளங்களான யூரோ ஒயில், ஆசாத் காஷ்மீர்
உயர் நீதிமன்றம், பலுசிஸ்தான் பல்கலைக்கழகம், வாடா அழைப்பு முகவர் மற்றும் சிந்து
பொலிஸ் ஆகியவற்றின் தரவுகளை ஊடுருவியதாகக் கூறியுள்ளது.
ஏப்ரல் 22 ஆம் திகதி காஷ்மீரின் பஹல்காமில்
இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு
பாகிஸ்தானுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். இதற்கு உடனடி
பதிலடியாக, ஏப்ரல் 23 ஆம் திகதி இந்தியா சிந்து நதி நீர் உடன்படிக்கையை
இடைநிறுத்துவதாகவும், பஞ்சாபில் உள்ள அட்டாரி எல்லையை
மூடுவதாகவும், பாகிஸ்தானுடனான தூதரக உறவுகளை
குறைப்பதாகவும் அறிவித்தது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் தனது வான்வெளியை இந்திய
விமானங்களுக்கு மூடவும், வர்த்தகத்தை நிறுத்தவும், நீர் உடன்படிக்கை தொடர்பான இந்தியாவின்
நடவடிக்கையை நிராகரிக்கவும் செய்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கை "போர்
நடவடிக்கை"யாக கருதப்படும் என்றும் பாகிஸ்தான் எச்சரித்தது.
ஈடி ஊடகத்
தகவல்களின்படி, 'சைபர் குரூப் ஹோக்ஸ்1337' மற்றும் 'நேஷனல் சைபர் குரூ' ஆகிய குறைந்தது இரண்டு சைபர் தாக்குதல்
குழுக்கள் இந்திய இராணுவத்துடன் தொடர்புடைய வலைத்தளங்களை தீவிரமாக குறிவைத்து, இந்த உயர் பாதுகாப்பு வலயங்களுக்குள்
ஊடுருவ தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. "இந்த தாக்குதல்கள் குழந்தைகள், முன்னாள் இராணுவ வீரர்கள் மற்றும்
பொதுமக்கள் தொடர்பான வலைத்தளங்களில் கவனம் செலுத்தியுள்ளன," என்று பெயர் குறிப்பிட விரும்பாத
வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தியாவின் இராணுவத்தை தூண்டிவிட்டு அவர்களின்
கட்டுப்பாட்டை சோதிப்பதே இந்த தாக்குதல்களின் நோக்கம் என்றும் அவர்கள் கூறினர்.
இந்த சைபர்
தாக்குதல்கள் பாகிஸ்தானின் பரந்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாகும். பாகிஸ்தான் நீண்ட
காலமாக பயங்கரவாதம் மற்றும் தகவல் பிரச்சாரங்களுடன் இணைந்து இணைய யுத்தத்தையும்
பயன்படுத்தி வருகிறது. எல்லைக் கட்டுப்பாட்டு கோடு (LoC) பகுதியில் தொடரும் போர் நிறுத்த மீறல்கள்
இந்த தொடர்ச்சியான தூண்டுதலை எடுத்துக்காட்டுகின்றன. குறிப்பாக, 'பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான
அறிக்கை மற்றும் புதுப்பிப்பு' என்று
பெயரிடப்பட்ட ஒரு தீங்கிழைக்கும் PDF கோப்பு இந்திய சைபர் பாதுகாப்பு நிபுணர்களால்
கண்டறியப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ இந்திய அரசாங்க வலைத்தளங்களைப்போல் தோற்றமளிக்கும்
பிஷிங் டொமைன்களுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த ஆவணம், முக்கியமான தகவல்களை திருடுவதற்கான ஒரு பெரிய திட்டத்தின்
ஒரு பகுதியாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
நிபுணர்கள் இந்த
சைபர் தாக்குதல்கள் மேலும் தீவிரமடையும் என்று கணிக்கின்றனர். குயிக் ஹீல் டெக்னோலொஜிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி
விஷால் சால்வி, இந்திய பாதுகாப்பு மற்றும் முக்கியமான
உள்கட்டமைப்பை குறிவைத்து பாகிஸ்தான் ஆதரவுடைய சைபர் பிரச்சாரங்கள் கூர்மையாக
அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டுகிறார்
PwC இந்தியாவின் பங்காளரான சுந்தரேஷ்வர்
கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், சைபர் தாக்குதல்கள்
தனிமைப்படுத்தப்பட்ட இடையூறுகளைத் தாண்டி நகர்ந்துள்ளன. "சைபர் தாக்குதல்கள்
இப்போது புவிசார் அரசியல் மூலோபாயத்தின் திட்டமிட்ட விரிவாக்கங்களாக மாறிவிட்டன," என்று அவர் ஈடிக்கு தெரிவித்தார்.
"ஒவ்வொரு பெரிய பதட்டமான சூழ்நிலையும் இப்போது ஒரு நாட்டின் முக்கியமான
உள்கட்டமைப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஒருங்கிணைந்த டிஜிட்டல்
தாக்குதல்களைத் தூண்டுகிறது." டிஜிட்டல் யுத்தகளம் வேகமாக வளர்ந்து வருகிறது, இரு தரப்பினரும் கண்டறிவதைத் தவிர்த்து
அதிகபட்ச இடையூறை ஏற்படுத்துவதற்கு ஏற்ப தங்களை மாற்றியமைத்து வருகின்றனர்.
எல்லைக் கட்டுப்பாட்டு கோடு (LoC) பகுதியில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்திய கடற்படை வடக்கு அரபிக் கடலில் ஒரு NavArea எச்சரிக்கை விடுத்துள்ளது. மே 3 ஆம் திகதி வரை நடைமுறையில் உள்ள இந்த எச்சரிக்கை, இப்பகுதியில் பாகிஸ்தானின் கடற்படை போர் ஒத்திகைகளுக்கு மத்தியில் கப்பல்கள் குறிப்பிட்ட வெடிப்பு வலையத்திலிருந்து விலகி இருக்குமாறு எச்சரிக்கிறது. பாகிஸ்தானின் பயிற்சி வலயத்திலிருந்து சுமார் 80-85 கடல் மைல் தூரத்தில் உள்ள இந்த பகுதியை இந்திய கடற்படை ஆபத்தானதாகக் குறிப்பிட்டுள்ளது. இது இந்தியாவின் கடல்சார் இருப்பை நிலைநிறுத்தும் தயார்நிலையை காட்டுகிறது.
இந்திய அரசாங்கம்
இராணுவம் மற்றும் விமானப்படைக்கான மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் துருவ் வகையின்
செயல்பாடுகளை மீண்டும் தொடங்க அனுமதி அளித்துள்ளது. 330 க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் கொண்ட
முழு படையும் ஜனவரியில் தரையிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இராணுவம், விமானப்படை மற்றும் கரையோர காவல்படை
வகைகள் இப்போது பறக்க அனுமதிக்கப்பட்டாலும், கடற்படை வகை இன்னும் தரையிறக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான சூழ்நிலையில், இலங்கை போன்ற நாடுகள் இப்பிராந்தியத்தில்
நிலவும் பதற்றத்தை உன்னிப்பாக கவனித்து வருவதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான அமைதியை நிலைநாட்ட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது
அவசியமாகும். சைபர் பாதுகாப்பு தொடர்பான சிறந்த முகாமைத்துவ நடைமுறைகளை
அமுல்படுத்துவதுடன், பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதன்
மூலமும் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். உதாரணமாக, எஸ்தோனியா போன்ற நாடுகள் சைபர்
பாதுகாப்பு சிறப்பான முன்னேற்றத்தை அடைந்துள்ளன. அந்நாட்டின்
அனுபவங்களை ஆராய்ந்து, பிராந்திய நாடுகளுடன் இணைந்து சைபர்
தாக்குதல்களை எதிர்கொள்வதற்கான கூட்டு பொறிமுறைகளை உருவாக்கலாம். மேலும், சர்வதேச சட்டங்கள் மற்றும்
நெறிமுறைகளுக்கு மதிப்பளித்து இரு நாடுகளும் பொறுப்புடன் நடந்துகொள்வது
பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு மிகவும் முக்கியமானது.
உஷாத்துணை:
Economic Times.
(2025, May 5). Pakistan-sponsored hacker groups target Indian military
websites amid Pahalgam fallout.
#IndiaPakistan #Tention
0 comments:
Post a Comment