பல
நூற்றாண்டுகளாக நேபாளம் ஷா வம்சத்தின் முடியாட்சிகளால் (monarchs of the Shah dynasty) ஆளப்பட்டது. 1960 இல் மன்னர் மகேந்திராவின் ஜனநாயகக்
கட்சிகளை கலைத்ததன் மூலம், சர்வாதிகார முடியாட்சி ஆட்சிமுறை
(authoritarian monarchy) உருவானது. இது எதிர்ப்பை ஒடுக்கி,
அரசியல் நிறுவனங்களை பலவீனமாக வைத்திருந்தது. 1990 இல் மக்கள் இயக்கம் I (People's Movement I), முடியாட்சியை
ஒழித்து, ஒரு அரசியலமைப்பு முடியாட்சி மற்றும் பல கட்சி
ஜனநாயகத்தை கொண்டு வந்தது. இருப்பினும், 1990களில் ஊழல்,
பலவீனமான ஆட்சிமுறை மற்றும் சமத்துவமின்மை போன்ற பிரச்சினைகள்
தலைதூக்கின. 1996 இல், மாவோயிச
கிளர்ச்சி (Maoist insurgency) கிராமப்புறங்களில் இருந்து 'மக்கள் போர்' (People’s War) என்ற பெயரில்
தொடங்கியது. இது வறுமை, நிலமற்ற நிலை மற்றும் அரசின்
அலட்சியம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இருந்தது. சுமார் 17,000 மக்கள் கொல்லப்பட்ட பின்னர், 2006 இன் மக்கள்
இயக்கம் II, அரசியல் கட்சிகள், சிவில்
சமூகம் மற்றும் மாவோயிஸ்டுகளை ஒன்றிணைத்து, மன்னர்
ஞானேந்திராவின் சர்வாதிகாரத்திற்கு எதிராகப் போராடியது. 2006 இன் விரிவான சமாதான ஒப்பந்தம் (Comprehensive Peace Accord), மோதலை முடிவுக்குக் கொண்டு வந்ததுடன், நேபாளத்தை ஒரு
மதச்சார்பற்ற, கூட்டாட்சி, ஜனநாயகக்
குடியரசாக (secular, federal, democratic republic) 2008 இல்
அறிவிக்க வழிவகுத்தது. 2015 இன் அரசியலமைப்பு, கூட்டாட்சி மற்றும் உள்ளடக்கிய தன்மையை (Federalism and inclusion)
உறுதி செய்தது, வரலாற்று ரீதியாக ஒதுக்கப்பட்ட
குழுக்களுக்கு சுயாட்சி மற்றும் பிரதிநிதித்துவத்தை உறுதியளித்தது. ஆனால்
நடைமுறையில், சமூக மற்றும் பொருளாதார சமத்துவமின்மையின்
ஆழமான வேர்கள் தொடர்ந்தன.
மாவோயிஸ்டுகள்
மற்றும் ஏனைய இடதுசாரி கட்சிகள் நில சீர்திருத்தம், மறுபகிர்வு மற்றும் உயரடுக்கு
மேலாதிக்கத்திற்கு (elite domination) ஒரு முடிவைக்
கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தன. இருப்பினும், மோதலுக்குப்
பிந்தைய ஆண்டுகளில், பல தவறான கொள்கைகள் பின்பற்றப்பட்டன.
அடுத்தடுத்த அரசாங்கங்கள் வெளிநாட்டு கடன்கள் மற்றும் முதலீடுகளைத் தேடி, சந்தைகளைத் திறந்து விட்டன. ஆனால், விவசாயம் மற்றும்
தொழில்துறையில் கட்டமைப்பு மாற்றங்களை (structural transformation) புறக்கணித்தன. இதனால், நேபாளத்தின் பொருளாதாரம்
வெளிநாடுகளிலிருந்து வரும் பணம் (remittances), சேவைகள்
மற்றும் சுற்றுலா போன்ற துறைகளையே பெரிதும் சார்ந்து இருந்தது. இதனால், அது வெளி அழுத்தங்களுக்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படக்கூடியதாக
இருந்தது. அதேபோல, கூட்டாட்சி மாகாணங்கள்
உருவாக்கப்பட்டிருந்தாலும், உண்மையான பொருளாதார அதிகாரம்,
வளங்கள் மீதான கட்டுப்பாடு மற்றும் வரிகள் ஆகியவை காத்மண்டுவில்
மட்டுமே குவிந்திருந்தன. இதனால், கிராமப்புற சமூகங்களுக்கு
கூட்டாட்சி என்பது புதிய மாகாண அலுவலகங்களை மட்டுமே கொண்டு வந்தது, அவர்களின் வாழ்வாதாரத்தில் சிறிய மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. மேலும்,
நேபாளம் அரசாங்கங்கள் மிக விரைவான சுழற்சியில் மாறிக்
கொண்டிருந்தது. இதனால், கட்சிகளுக்குள் இருந்த கோஷ்டி
பூசல்கள் (factionalism) நல்லாட்சியை (governance) பலவீனப்படுத்தின.
சமூக ஊடகங்களை
தடை செய்ய அரசாங்கம் முயன்றபோது, இது புதிய தலைமுறைக்கு ஒரு 'வாய் மூடும்
உத்தரவு' (gag order) ஆகக் கருதப்பட்டது. சமூக ஊடகம்
அவர்களின் முதன்மை அரசியல் களமாக மாறியிருந்தது. அது ஊழலை அம்பலப்படுத்தவும்,
விவாதிக்கவும், மக்களை அணிதிரட்டவும்
பயன்படுத்தப்பட்டது. இந்தத் தடை முயற்சியை, ஜனநாயக
வாக்குறுதிகள் மற்றும் பொருளாதார நீதி மறுக்கப்பட்ட ஒரு தலைமுறையின் ஆழமான
நம்பிக்கைத் துரோகமாகக் (depth of betrayal) கருதினர். 'சமத்துவம், கூட்டாட்சி, மதச்சார்பின்மை
பற்றி நாங்கள் கேட்டு வளர்ந்தோம்,' என ஒரு பல்கலைக்கழக
மாணவர் கூறினார். 'ஆனால் எங்களால் வேலை தேட முடியவில்லை.
எங்கள் தலைவர்களின் குழந்தைகள் துபாயில் விடுமுறை கொண்டாடும்போது, எங்களால் இன்டர்ன்ஷிப் கூட செய்ய முடியவில்லை.' இந்த
நிலைமை, தற்போதைய நேபாளத்தின் யதார்த்தத்தை
வெளிப்படுத்துகிறது. இந்த போராட்டங்கள், அரசாங்கத்தை
கவிழ்க்கும் அளவுக்கு வளர்ந்தது. தற்போது, இடைக்கால பிரதமராக
(interim Prime Minister) முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா
கார்க்கி நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், போராட்டத்தின் மையப்
பிரச்சினைகள் இன்னும் நீடிக்கின்றன.
இந்த
எழுச்சியானது தனிமைப்படுத்தப்பட்ட ஒரு நிகழ்வு அல்ல. இந்தியா மற்றும் சீனாவுக்கு
இடையில் உள்ள ஒரு நாடாக, நேபாளத்தின் அரசியல் மற்றும் பொருளாதாரம் வெளிப்புற போட்டிகள் மற்றும்
சார்புகளால் (external rivalries and dependencies) வடிவமைக்கப்படுகின்றன.
பெல்ட் அண்ட் ரோட் திட்டத்தின் (Belt and Road Initiative) கீழ்
சீனா பில்லியன் கணக்கான டொடாலர்களை உள்கட்டமைப்பில் முதலீடு செய்துள்ளது. இதற்குப்
போட்டியாக, இந்தியா தனது சொந்த திட்டங்கள் மற்றும் வர்த்தக
செல்வாக்கு மூலம் சமநிலைப்படுத்த முயல்கிறது. இந்த நாடுகளின் செல்வாக்கு உள்நாட்டு
ஊழல் மற்றும் மேலாதிக்கத்தை மேலும் அதிகரிக்கிறது. நேபாளத்தின் பொருளாதார சார்பு,
வெளிநாட்டு உதவிகள் மற்றும் கடன்கள் மூலம் அதன் கைகளை
கட்டிப்போட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டங்கள்
சமூக செலவினங்களைக் குறைக்கும்போது, சீனக் கடன்கள் 'கடன் பொறி' (debt traps) குறித்த அச்சங்களை
எழுப்புகின்றன. இந்த சூழ்நிலையில், இளைஞர்களின் போராட்டங்கள்
ஒரு ஊழல் அரசாங்கத்திற்கு எதிரானவை மட்டுமல்ல; உள்ளூர்
உயரடுக்குகள் உலகளாவிய சக்திகளுடன் இணைந்து, சாதாரண நேபாள
மக்களை வறுமை, சார்பு மற்றும் சமத்துவமின்மைக்கு இடையில்
சிக்க வைக்கும் ஒரு அமைப்புக்கு எதிரான கிளர்ச்சியாகும்.
நேபாளத்தின்
எழுச்சிக்கு இலங்கையின் 'அறகலய'
(2022) மற்றும் பங்களாதேஷின் 'பருவமழை எழுச்சி'
(Monsoon Uprising) (2024) போன்ற பிற தெற்காசிய எழுச்சிகளுடன்
தவிர்க்க முடியாத ஒப்பீடுகள் உள்ளன. இந்த அனைத்து கிளர்ச்சிகளிலும், இளைஞர்களின் ஆற்றல், சமூக ஊடகம் ஒரு ஆயுதமாகப்
பயன்படுத்தப்படுதல், ஊழல் மற்றும் சமத்துவமின்மை ஆகியவை
எரிபொருளாக இருப்பது போன்ற ஒற்றுமைகள் உள்ளன. இலங்கையில் பொருளாதார சரிவு மையமாக
இருந்தபோது, பங்களாதேஷ் மற்றும் நேபாளத்தில் தணிக்கை மற்றும்
அடக்குமுறை ஆகியவை போராட்டத்தைத் தூண்டின. ஆனால், இந்த
போராட்டங்களின் அடிப்படை காரணங்கள் ஒரே மாதிரியானவை: ஜனநாயக வாக்குறுதிகளுக்கு
ஏற்பட்ட துரோகம் மற்றும் அடிப்படை நீதிக்கான ஏக்கமே (betrayal of
democratic promises and a longing for basic justice) இப்போராட்டங்களின்
மையமாக உள்ளது.
ஒரு இடைக்கால
அரசாங்கமாக, சுசீலா கார்க்கி ஒரு சமநிலையை பேண வேண்டிய சவாலை எதிர்கொள்கிறார்.
போராட்டக்காரர்கள் ஊழலுக்கு ஒரு முடிவு, நீதிக்கான உறுதி
மற்றும் உண்மையான சீர்திருத்தங்களை (real reforms) கோருகின்றனர்.
அரசியல் வர்க்கத்தில் உள்ள நலன் கொண்ட குழுக்கள் மாற்றத்தை எதிர்க்கின்றன. இந்தச்
சுழற்சியிலிருந்து நேபாளம் விடுபட வேண்டுமானால், மூன்று
விஷயங்கள் தெளிவாகத் தெரிகின்றன. முதலாவதாக, பொறுப்புக்கூறல்
(accountability) முக்கியமானது. படுகொலைகள்
மற்றும் ஊழல் குறித்து சுதந்திரமான விசாரணைகள் இல்லாமல், செப்டம்பர்
2025 இன் காயங்கள் ஆறாது. இரண்டாவதாக, பொருளாதார அதிகாரப் பரவலாக்கம் (economic decentralisation) அவசரமானது. கூட்டாட்சி என்பது உள்ளூர்
மட்டத்தில் உண்மையான வளக் கட்டுப்பாடு, வேலைகள், நிலம், தொழில்கள் மற்றும் சேவைகள் கிராமப்புறங்களை
அடைவதை உறுதி செய்ய வேண்டும். மூன்றாவதாக, இளைஞர்களை
ஒதுக்கி வைக்காமல், அவர்களை உள்ளடக்க வேண்டும். புதிய தலைமுறை அரசியல் அமைப்புகளை வடிவமைக்க முடியும் என்பதை
நிரூபித்துள்ளது. இந்த இடைக்கால தருணம் ஒரு புதிய விடியலாக மாறுமா அல்லது மற்றொரு
முறிந்த வாக்குறுதியாக மாறுமா என்பது, அரசியல்வாதிகளை விட,
நேபாளத்தின் இளைஞர்களின் ஆற்றலைச் சார்ந்துள்ளது. அவர்கள், வரலாறு தடைபடும் போது வீதிகளில் இறங்கத் தயாராக உள்ளனர்.
இலங்கைக்கும், நேபாளத்தின்
போராட்டங்களிலிருந்து கற்றுக்கொள்ள பல பாடங்கள் உள்ளன. நமது சமூகத்திலும், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையிலான இடைவெளி இன்னும் ஆழமாக உள்ளது.
'அறகலய' ஒரு அரசியல் மாற்றத்தைக்
கொண்டு வந்தாலும், அடிப்படை நிறுவன மற்றும் பொருளாதார
சீர்திருத்தங்கள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. எனவே, இந்தியா,
பங்களாதேஷ் மற்றும் நேபாளம் போன்ற நாடுகளில் நடக்கும் அரசியல்
நிகழ்வுகளை உன்னிப்பாகக் கண்காணிப்பதுடன், நமது நாட்டிலும்
இதே போன்ற பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஊழலுக்கு எதிரான உறுதி, இளைஞர்களை அதிகாரமளித்தல்
மற்றும் பொருளாதார நீதியை நிலைநாட்டுதல் ஆகியவை இலங்கையின் எதிர்கால
ஸ்திரத்தன்மைக்கு (future stability) மிக அவசியமானவை.
.jpeg)


0 comments:
Post a Comment