ADS 468x60

18 September 2025

நவீனப் பொதுப் போக்குவரத்து: அபிவிருத்திக்கு ஓர் அர்ப்பணம்

கடந்த அறுபது வருடங்களாக, கொழும்பின் மத்திய பேருந்து நிலையம், பலருக்கும் ஒரு சோகமான அனுபவத்தையே தந்திருக்கிறது. அழுக்கான சுவர்கள், உடைந்த இருக்கைகள், போதிய வசதிகள் இல்லாத சூழல் என, இது ஒரு பயண மையமாக இல்லாமல், பயணிகளின் பொறுமையைச் சோதிக்கும் ஒரு களமாகவே இருந்தது. ஆனால், இன்று நிலைமை மாறுகிறது. இலங்கை விமானப்படை, கொழும்பு மாநகர சபை, மின்சார சபை, நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை என பல அரச நிறுவனங்கள், தேசிய புத்திஜீவிகள் அமைப்புகளுடன் இணைந்து இந்த திட்டத்தை முன்னெடுக்கின்றன. இது அரசும், மக்களும், தன்னார்வ நிறுவனங்களும் சேர்ந்து ஒரு நாட்டின் வளர்ச்சிக்காக எப்படி ஒத்துழைக்க முடியும் என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டு.

இந்தத் திட்டத்தை நான் வெறும் கட்டுமான வேலையாகப் பார்க்கவில்லை. இது, மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான ஒரு பெரிய அர்ப்பணம். கனடாவில் உள்ள டொறன்டோ, ஜப்பானில் உள்ள டோக்கியோ, அவுஸ்திரேலியாவில் உள்ள மெல்பேர்ண் போன்ற நகரங்கள், இன்று உலகப் புகழ்பெற்ற பொதுப் போக்குவரத்து கட்டமைப்புகளால் அறியப்படுகின்றன. இந்த நாடுகள் வெறும் சாலைகள் மற்றும் ரயில்களை உருவாக்கவில்லை. அவை, மக்களுக்கான பாதுகாப்பான, துரிதமான, மற்றும் சூழலுக்கு நட்பான ஒரு பயண அனுபவத்தை உருவாக்கின. அதுதான் அவற்றின் பொருளாதார வளர்ச்சிக்குக் காரணம். போக்குவரத்து, ஒரு நாட்டின் இரத்த ஓட்டம். அந்த ஓட்டம் சீராக இருந்தால், பொருளாதாரம் ஆரோக்கியமாக இருக்கும்.

இன்று நாம் தொடங்கவிருக்கும் இந்த வேலைத்திட்டம், வெறும் பேருந்து நிலையம் பற்றியது அல்ல. இது, இலங்கை ஒரு முழுமையான அபிவிருத்தியை நோக்கிச் செல்கிறது என்பதற்கான சான்று. 2026ஆம் ஆண்டு, சிங்கள - தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் இந்தத் திட்டம் நிறைவடையும் போது, அது புதியதொரு தொடக்கத்தின் அடையாளமாக இருக்கும். அந்த நவீனப் பேருந்து நிலையம், சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமன்றி, நாள்தோறும் வேலைக்குச் செல்லும், கல்விக்குச் செல்லும், தங்கள் வாழ்வின் கனவுகளைத் துரத்தும் ஒவ்வொரு இலங்கை மக்களுக்கும் ஒரு புதிய அனுபவத்தைத் தரும்.


 

0 comments:

Post a Comment