ADS 468x60

20 September 2025

எதிர்க்கட்சிகளின் ' அன்றாடச் சுற்றுலா அரசியல் '

'அன்றாடச் சுற்றுலா' என்பது அன்றைய தினத்தின் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்ய முனையும் ஒரு மனநிலையைக் குறிக்கிறது. இது, நீண்டகாலத் திட்டங்கள், கொள்கைகள் அல்லது எதிர்கால நோக்கங்கள் இல்லாமல், உடனடி ஆதாயங்கள் அல்லது தேவைகளை மட்டும் இலக்காகக் கொண்ட ஒரு நடவடிக்கையாகும். இத்தகைய மனநிலையில், ஒழுக்கநெறி, கொள்கைப்பற்று அல்லது சட்ட விதிமுறைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. மாறாக, அன்றைய தினத்தின் உணவுத் தேவை அல்லது உடனடிச் சந்தோஷம் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுகிறது. இந்த மனநிலையை இன்றைய இலங்கையின் எதிர்க்கட்சிகளின் அரசியல் அணுகுமுறையோடு ஒப்பிட்டுப் பார்ப்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

ஒரு வலுவான எதிர்க்கட்சி என்பது, ஆளுங்கட்சியின் கொள்கைகள், செயற்பாடுகள் ஆகியவற்றை நேரடியாக விமர்சிப்பதற்கும், அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் நோக்கத்துடன் செயற்படுவதற்கும் அவசியமானதாகும். இதற்கு, ஆழமான அரசியல் பார்வை, திட்டவட்டமான கொள்கைகள், மற்றும் வலுவான கோஷங்கள் தேவை. ஆனால், இன்றைய இலங்கையின் அரசியல் நிலவரத்தை உற்றுநோக்கும்போது, எதிர்க்கட்சிகள் ஒரு தெளிவான அரசியல் கொள்கையோ அல்லது கோஷமோ இல்லாமல், வெறுமனே ‘அன்றாடச் சுற்றுலா’ அரசியலில் ஈடுபட்டிருப்பதாகத் தோன்றுகிறது. அவர்கள் தினசரி செய்தியாளர் சந்திப்புகளை நடத்தி, தங்களின் ஆதரவாளர்களைத் திருப்திப்படுத்திவிட்டு, அன்றைய தினத்துடன் தங்கள் பணியை முடித்துக்கொள்கின்றனர்.

ஒரு ஆரோக்கியமான ஜனநாயகம் செழித்து வளர ஒரு வலுவான எதிர்க்கட்சி அவசியமானது. ஆனால், இன்றைய எதிர்க்கட்சி, அரசியல் கொள்கைகள் மற்றும் கோஷங்கள் இல்லாமல், ஒரு ஆரோக்கியமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி அரசாங்கம் முன்னெடுத்து வரும் பிரமாண்டமான அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் ஊழல் ஒழிப்பு வேலைத்திட்டங்களில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதே அவர்களின் இன்றைய முக்கிய நோக்கமாக மாறியுள்ளது. எதிர்க்கட்சி எறிகின்ற பந்துகளுக்கெல்லாம் ஆளுங்கட்சி 'சிக்ஸர்' அடிக்கத் துணியக்கூடாது என்று நாம் சொல்வதற்குக் காரணம் இதுதான். அப்படிச் செய்யும்போது, ஆளுங்கட்சி எதிர்க்கட்சியின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் அறியாமலேயே அகப்பட்டுவிடும்.

அண்மைக்காலமாக, எதிர்க்கட்சியினர், சொத்து மற்றும் பொறுப்புக்கள் குறித்த பிரகடன விவகாரத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர். 2023 ஆம் ஆண்டின் இலக்கம் 9 கொண்ட ஊழல் எதிர்ப்புச் சட்டம் அமுலுக்கு வந்ததை அடுத்து, அனைத்து அரச ஊழியர்களும், அரச பதவிகளை வகிப்பவர்களும் இந்த அறிக்கையை லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விசாரணைகளுக்கான ஆணைக்குழுவில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆவணங்கள் பொதுமக்களின் பார்வைக்கு இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. எதிர்க்கட்சியோ, இந்த இணையதளத்தில் உள்ள சில ஆவணங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை ஒரு புலனாய்வுப் பத்திரிகையாளரின் கண்டுபிடிப்புபோல சமூகமயமாக்கி வருகிறது. அனைத்துக் கட்சி அரசியல்வாதிகளின் சொத்து விபரங்களும் அடங்கியிருக்கும் இந்த ஆவணங்களில், ஒரு தரப்பினரின் தகவல்களை மட்டும் வெளிப்படுத்துவது ஒரு மோசமான அரசியல் சந்தர்ப்பவாதமே.

எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் சந்தேகம் கொண்டிருந்தால், அவர்கள் செய்தியாளர் சந்திப்புகளை நடத்துவதற்குப் பதிலாக நீதிமன்றத்துக்குச் சென்று இதை சவாலுக்கு உட்படுத்த வேண்டும். ஆனால், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் ஊழல் வழக்குகள் தற்போது நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த வழக்குகளில், லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விசாரணைகளுக்கான ஆணைக்குழுவுக்கு அவர்கள் தாக்கல் செய்த சொத்து விபரங்கள் மூலமாகப் பெறப்பட்ட தகவல்கள் பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உதாரணமாக, கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டுகளைக் குறிப்பிடலாம். இத்தகைய சூழலில், முறையாக சமர்ப்பிக்கப்பட்ட ஒரு ஆவணத்திலுள்ள சொத்துக்கள் குறித்து கேள்வி எழுப்புவதும், அதே சமயம், ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் பணம் ஈட்டிய முறையை நிரூபிக்க வேண்டிய தேவை இருப்பதும் முரண்பாடான மனநிலையைக் காட்டுகிறது. ஒரு அமைச்சர் தனது பதவிக்காலத்தில் பில்லியன்களையும் டிரில்லியன் கணக்கிலும் எவ்வாறு சம்பாதித்தார் என்பது சட்டத்தின் முன் கேள்விக்குட்படுத்தப்பட வேண்டியது. இது குறித்து மௌனம் காத்துவிட்டு, லஞ்ச ஆணைக்குழுவின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஆவணத்தைக் கொண்டு மட்டும் அரசியல் அறிக்கைகளை வெளியிடுவது 'அன்றாடச் சுற்றுலா' அரசியல் அன்றி வேறென்ன?

இந்த வாரம் சொத்து விபரங்கள் குறித்து அரசியல் செய்துவிட்டாலும், அடுத்த வாரத்துக்கு அவர்களுக்கு என்ன தலைப்பு இருக்கிறது? முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விஜேராமையில் இருந்து தங்காலையிலுள்ள கார்ல்டன் இல்லத்துக்கும், அங்கிருந்து மெதமுலன மாளிகைக்கும், இன்னும் சில நாட்களில் கொழும்பில் உள்ள ஒரு வீட்டுக்கும் அழைத்துச் செல்லும் 'அன்றாடச் சுற்றுலா' நாடகம் போன்ற செயல்களும் ஒரு நல்ல தலைப்பாக அவர்களுக்கு அமைகிறது.

எனவே, இந்த கோஷங்கள் அற்ற ' அன்றாடச் சுற்றுலா' அரசியலுக்குப் பதிலாக, கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு கண்ணியமான அரசியல் முறை நாட்டுக்குத் தேவைப்படுகிறது. ஊழல் எதிர்ப்பு வேலைத்திட்டங்களும், கிராமிய மட்டத்திலிருந்து தேசிய மட்டம் வரை பரந்துள்ள அபிவிருத்தி திட்டங்களும், இந்த 'அன்றாடச் சுற்றுலா' அரசியலுக்கு பலியாகிவிடாமல் தடுப்பது, ஒரு அறிவார்ந்த அரசியல் சமூகத்தின் கடமையாகும்.

0 comments:

Post a Comment