ADS 468x60

15 September 2025

மனிதத்தின் உயரங்களில் ஒரு தலைமைத்துவப் பயணம்: பா.கமலநாதன் ஒரு சான்று

பரபரப்பான வணிக உலகின் உச்சத்தில் இருக்கும் ஒரு தலைமை நிர்வாக அதிகாரி, தனது வர்த்தகப் பயணத்தை வெற்றிகரமாக வழிநடத்தும் அதே வேளையில், தனது சமூகத்தின் ஆன்மிக மற்றும் மனிதநேயத் தேவைகளுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கிறார் என்றால் அது வெறும் சாதனை அல்ல, அது ஒரு அரிதான தலைமைத்துவப் பண்பின் வெளிப்பாடு. அத்தகைய ஒரு அரிய மனிதரே, கனடாவில் இயங்கும் SQM ஜெனிடோரியல் சேவிசஸ் கம்பெனியின் தலைமை நிர்வாக அதிகாரியும், மக்களால் அன்புடன் ‘கண்ணன்’ என அழைக்கப்படுபவருமான பா.கமலநாதன் அவர்கள். தேற்றாத்தீவு (தேனூர் )மண்ணில் பிறந்து, இந்த மக்களுக்கே வாழ்வளிக்கும் ஒரு நற்பணியாளன், மக்களின் நண்பனாக, சேவையின் நாயகனாக நம்மிடையே வாழ்ந்து வருகிறார்.

வர்த்தகமும் ஆன்மிகமும் இரு வேறு துருவங்கள் எனப் பரவலாகப் பேசப்படும் இக்காலத்தில், இந்த இரு துருவங்களையும் இணைக்கும் ஒரு பாலமாக கண்ணன் அண்ணனின் வாழ்க்கை திகழ்கிறது. ஒரு வர்த்தகப் பேரரசை நிர்வகிக்கும் அதே ஆற்றலுடன், ஆயிரக் கணக்கான மக்களைத் தலைமை தாங்கி, தேற்றாத்தீவு ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தினை மிக் குறுகிய காலத்தில் மக்களின் ஒருமித்த உதவியில் தலைமைதாங்கிக் கட்டி நிறைவுசெய்து, அதற்காக ராஜகோபு பணியினை முன்னெடுத்து நிறைவு செய்தது ஒரு புனிதப் பணி. இச்செயல், வெறும் ஆன்மிகப் பணி மட்டுமல்ல, அது சமுதாய ஒற்றுமைக்கான ஒரு மகத்தான முயற்சி. ஆலயத்தின் ராஜகோபுரம் வெறும் செங்கற்களும், சிமென்ட்டும் மட்டும் இணைந்த கட்டிடம் அல்ல; அது மக்கள் நம்பிக்கையின் உயரம், கண்ணன் சேவையின் சிகரம்.

அந்த ஆலயத்தின் உயரமான கோபுரம் போலவே, கண்ணன் அவர்களின் சாதனைகளும் உயர்ந்தவை. ஆலயத் திருப்பணியை நிறைவு செய்ததோடு மட்டுமல்லாமல், அதன் திருவிழாவையும் ஒரு பெருவிழாவாக நடத்தி, மக்களிடையே ஒற்றுமையையும் மகிழ்ச்சியையும் நிலைநாட்டியது அவரது பன்முக ஆளுமைக்குச் சான்றாக அமைகிறது. இதுவே, நாம் இதுவரை அறியாத, வணிகத் தலைமைத்துவத்திற்கும் சமூகத் தலைமைத்துவத்திற்கும் இடையே உள்ள புதிய சேவை நோக்குள்ள தலைமைப் பண்பு’ என நாம் அழைக்கலாம். இத்தகைய தலைமைத்துவம், தனிப்பட்ட வெற்றியை மட்டும் இலக்காகக் கொள்ளாமல், சமூகத்தின் மேம்பாட்டையும், அதன் ஆன்மிக மற்றும் வாழ்வியல் தேவைகளையும் பூர்த்தி செய்வதை தனது அடிப்படை கடமையாகக் கொள்கிறது.

இத்தகைய தலைமைத்துவப் பண்பை நாம் தமிழ் இலக்கியங்களில் ஆழமாகக் காணலாம். நாலடியாரின் 274-வது பாடல், "கொடுத்தலும் துய்த்தலும் தேற்றா இடுக்குடை உள்ளத்தான் பெற்ற பெருஞ்செல்வம் - இல்லத்து உருவுடைக் கன்னியரைப் போலப் பருவத்தால் ஏதிலான் துய்க்கப் படும்" என்று கூறுகிறது. இதன் பொருள், பிறருக்குக் கொடுப்பதையும், தான் அனுபவிப்பதையும் அறியாத உலோபியின் செல்வம், வீட்டில் பிறந்து வளர்ந்த கன்னியரைப் போலப் பருவ காலத்தில் அயலாரால் அனுபவிக்கப்படும் என்பதாகும். ஆனால், கண்ணன் அண்ணனின் வாழ்க்கை அதற்கு நேர்மாறானது. அவரது செல்வம் வெறும் ஈட்டிய செல்வமாக மட்டும் அல்லாமல், ஈந்து உவக்கும் இன்பம் தரும் செல்வமாக மாறியுள்ளது. ஈட்டுதலும், ஈதலும் ஒருங்கே கொண்டு அவர் சமூகத்திற்குப் பெரும் பங்களிப்பைச் செய்து வருகின்றார். சங்க இலக்கியங்கள் பலவும் அறம், பொருள், இன்பம் என்ற முப்பாலையும் வலியுறுத்துகின்றன. பொருள் ஈட்டுவது ஒரு செயல் என்றால், அதை அறவழியில் ஈந்து, சமூகத்திற்குப் பகிர்ந்தளிப்பது அதனினும் மேலான செயல். கண்ணன் அண்ணன் இந்தச் சங்க இலக்கியப் பண்பாட்டைத் தனது வாழ்க்கையின் மூச்சாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார்.


நவீன உலகத்தின் தலைசிறந்த தொழிலதிபர்களில் ஒருவரான பில் கேட்ஸ், தனது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மூலம் ஈட்டிய செல்வத்தின் பெரும் பகுதியை, பில் & மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் மூலமாக உலகளாவிய சுகாதாரப் பணிகள், வறுமை ஒழிப்பு மற்றும் கல்வி மேம்பாட்டுக்காக செலவிடுகிறார். பில் கேட்ஸ் எவ்வாறு உலகளாவிய சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்க தனது செல்வத்தைப் பயன்படுத்துகிறாரோ, அதேபோன்று, கண்ணன் தனது சொந்த நாட்டின் அடிப்படைப் பிரச்சினைகளான வீடின்மை மற்றும் சுகாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்க தனது செல்வத்தையும் உழைப்பையும் அர்ப்பணித்துள்ளார். 40க்கும் மேற்பட்ட வீடுகள் - சமூகத்தில் வசதியற்ற மக்களுக்கு ஒரு உறைவிடம் கொடுத்த பெரும் பணி இது. ஆலயத் திருவிழா முடிந்த கையோடு, எமது நாட்டில் தனது 43வது வீட்டினை கட்ட அடிக்கல் இட்டுச் சென்றிருக்கின்றார் என்பது, அவரது சமூகப் பொறுப்புணர்வு எந்த அளவிற்கு ஆழமானது என்பதைக் காட்டுகிறது. அதுமட்டுமல்லாமல், மக்களின் அன்றாட சுகாதாரத் தேவைகளையும் கவனித்து, மலசலகூடங்கள் கட்டிக் கொடுத்து, ஒரு மக்கள் விரும்பும் பொறுப்பு மிக்க நிலையை எடுத்துள்ளார். இந்தச் செயல்கள், பில் கேட்ஸ் தனது பெருநிறுவன சமூகப் பொறுப்பை உலகளாவிய தளத்தில் செயல்படுத்தியதைப் போல, கண்ணன் அண்ணன் அதனைத் தனது நாட்டின் களத்தில் செயல்படுத்தி, ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறார் என்பதைக் காட்டுகிறது.

இவரைப் பற்றிப் பேசுவது வெறும் பாராட்டு அல்ல, சமுதாயத்தில் ஒற்றுமையை ஏற்படுத்திய மனிதரை நன்றியுடன் பாராட்டும் ஒரு சிறு முயற்சி. அவர் பணிகள் ஒவ்வொன்றும் சாதாரணமாகத் தோன்றினாலும், அதில் உள்ள சமூக சேவை உணர்வுகள் ஏற்கனவே ஆயிரக் கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியிருக்கின்றன. இவரது வாழ்க்கை நமக்கு ஒரு பாடமாக இருக்கட்டும். இவரது சேவையினைப் பாராட்டி அவரின் குடும்பமக்களான ஒப்பிகுடி மக்கள் அவரை ”தர்மபிரபு” என கௌரவித்துப் பாராட்டியிருப்பதும் சாலப்பொருந்தும். ஒவ்வொருவரும் நம்மால் முடிந்த அளவில் சமூகத்திற்கு உதவ வேண்டும் என்பதை அவர் செயலால் எடுத்துக்காட்டியுள்ளார். "மக்கள் இதயத்தில் வீடு கட்டியவர், தேவாலயத்திலும் தர்மத்திலும் எழுச்சி பெற்றவர்." என்று அவரது சேவையை ஒரு வரியில் சுருக்கலாம். அவரைப் போல் நாமும் ஒரு நல்ல அடையாளத்தை சமுதாயத்தில் விட்டுச் செல்ல முயலுவோம்.

இந்த ஆளுமைப் பண்பு, எமது எதிர்கால இளைஞர்களுக்குப் பாடமாக இருக்க வேண்டும், மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும், தொழில் தொடங்குகின்றவர்களுக்கு உந்து சக்தியாக இருக்க வேண்டும். ஆகவே, இவர் இலங்கைக்கு வருகின்ற காலப்பகுதிகளில் இவரை நிச்சயமாகப் பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள் இவருடைய கடந்த கால அனுபவம், இவருடைய திறன், இவருடைய ஆளுமைப் பண்பு, இவருடைய தொழில் வன்மை என்பனவற்றை அறிந்து கொள்வதற்காக இவரைக் கெளரவப் பேச்சாளராக அழைத்து, அவரிடம் இருந்து அந்த நல்ல வரலாற்று அனுபவங்களையும் படிப்பினைகளையும் பெற்றுக் கொள்வதே எமக்கு இருக்கின்ற அரிய வாய்ப்பாக நான் பார்க்கின்றேன். கண்ணன் அண்ணன், உங்களைப் போன்றவர்கள் சமூகத்திற்கு ஒரு அரிதான வரம். உங்கள் முன்னேற்றம் எங்கள் மகிழ்ச்சி.

மேலும், எமது இளைஞர்கள் வேலையின்மையால் அவதிப்படும் இச்சூழலில், அவர்களின் திறனை சர்வதேச அளவில் உயர்த்துவதற்கும், அதன் மூலம் சர்வதேச அளவில் தொழில் வாய்ப்பைப் பெறுவதற்கும், ஒரு மனிதவள மேம்பாட்டுச் செயல்பாட்டை நீங்கள் தொடங்கினால், அது மிகவும் புரட்சிகரமான உங்கள் அடுத்த அடியாக இருக்கும் என மக்கள் சார்பாக வேண்டுகிறோம். இது யுத்தம், வறுமை போன்ற பல பிரச்சனைகளுக்குள் சிக்கித் தவிக்கும் எங்கள் சமூகத்துக்கு ஒரு ஜீவ ஊற்றாக அமையும்.

0 comments:

Post a Comment