இந்தச் சம்பவம், ஒரு சில நிமிடங்களில்
அந்தப் புனிதக் களத்தை இரத்தக் களமாக மாற்றியது. நான்கு உயிர்கள்
பறிக்கப்பட்டன. எட்டு பேர் படுகாயமடைந்தனர். ஒரு சில விநாடிகள்... அந்த
அப்பாவிகளின் நம்பிக்கையும், பிரார்த்தனையின் நிம்மதியும்
சிதறுண்டன. காவல்துறை விரைந்து வந்து, துப்பாக்கிச் சூடு
நடத்தியவரை சுட்டுக் கொன்றனர். ஆனால், நிம்மதி என்ற வார்த்தை
அந்த மண்ணைவிட்டு நீங்கிவிட்டது.
கேள்வி இதுதான், அன்பின் உறவுகளே! ஆலயத்திலும்
நிம்மதி கிடையாதா?
உண்மையில், இந்தச் சம்பவம்
அமெரிக்காவில் நடந்தது என்றாலும், இது ஒரு உலகளாவிய உளவியல்
சிக்கலின் எதிரொலி. மனித மனம் ஏன் இவ்வளவு வன்மத்தை சுமக்க ஆரம்பிக்கிறது? நமது சமூகக் கட்டமைப்பு எங்கே தோல்வியடைந்தது? வழிபாட்டின்
ஒளியை, துப்பாக்கியின் நிழல் விழுங்கும் அளவிற்கு இந்த
சமூகம் வன்முறைக்கு அடிமையாகிவிட்டதா?
உலக அமைதிக்குப்
போராடிய மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் கூறியது போல, "இருள், இருளை நீக்காது; ஒளி மட்டுமே நீக்கும். வெறுப்பு,
வெறுப்பை நீக்காது; அன்பு மட்டுமே
நீக்கும்." இந்தச் சட்டம் நம் அனைவருக்கும்
பொருந்தும். நாம் ஒரு சமூகமாக, வெறுப்பையும், மனநோய்களையும், வன்முறைக்கான அத்துமீறிய அணுகலையும்
கட்டுப்படுத்தத் தவறிவிட்டோம்.
இன்று, நாம் எதிர்கொள்ளும்
சவால், வெறுமனே துப்பாக்கி வன்முறை மட்டுமல்ல; அது மனித மனதின் சமாதானமின்மை. இதை வென்றெடுக்க, நாம்
ஒவ்வொருவரும், அயலவரிடம் அன்பையும், கருணையையும்
வளர்க்க வேண்டும். கொள்கை வகுப்பவர்கள், துப்பாக்கி
முகாமைத்துவம் போன்ற சட்டங்களை இறுக்கமாக்குவதோடு, மக்களின்
மனநலனுக்கான முதலீட்டையும் அதிகரிக்க வேண்டும்.
0 comments:
Post a Comment