இந்திய –
பாகிஸ்தான் அணிகள் மோதிய அந்த இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் நிர்ணயித்த 147 ஓட்டங்கள் என்ற இலக்கை, இந்திய அணி இரண்டு
பந்துகள் மீதமிருக்கச் சாதுரியமாக எட்டிப் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது.
இது ஒவ்வொரு இந்திய ரசிகருக்கும் கிடைத்த பெருமை. அது ஒரு திறமையான அணியின் அயராத
உழைப்பின் வெளிப்பாடு. ஆனால், மகிழ்ச்சியில் திளைக்க வேண்டிய
அந்த வெற்றித் தருணம், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த
பெரும் சலசலப்புடன் முடிந்தது.
தோல்வியடைந்த
பாகிஸ்தான் அணிக்கு இரண்டாவது பரிசுக்கான காசோலை வழங்கப்பட்டது. அதன்பின்னர், வெற்றி பெற்ற இந்திய
அணிக்குக் கோப்பையும், பதக்கங்களும் வழங்கப்பட வேண்டிய
தருணம். ஆனால், ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் தலைவரும்,
பாகிஸ்தானின் உள்துறை அமைச்சருமான மோஷின் நக்வி கையில் இருந்து
ஆசியக் கோப்பையை வாங்க இந்திய அணி வீரர்கள் மறுத்தனர். இதுதான், விளையாட்டு அரங்கில் அரசியல் நிழல் விழுந்த கசப்பான சம்பவம்.
சம்பியன்
பட்டத்தை கௌரவப்படுத்துவதற்காக மேடையில் நின்ற இந்திய வீரர்கள், கோப்பையை வாங்காமல்,
2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் ரோகித்
சர்மா கோப்பையைக் கொண்டுவந்தது போல வெறும் கைகளால் கோப்பையைத் தூக்கி
வெற்றியைச் சைகை செய்து கொண்டாடினர். இந்திய அணியின் இந்த உறுதியான
நிலைப்பாட்டால், ஆசியக் கோப்பை நிர்வாகம், கோப்பையைக் கையோடு தூக்கிக்கொண்டு செல்ல நேர்ந்தது.
பி.சி.சி.ஐ. செயலாளர்
தேவ்ஜித் சைக்கியா பின்னர் செய்தியாளர்களிடம், "பாகிஸ்தானின் முக்கிய தலைவர்களில்
ஒருவரான ஆசிய கவுன்சில் தலைவரிடமிருந்து ஆசிய கோப்பையை நாங்கள் வாங்குவதில்லை
என்று முடிவு செய்துள்ளோம்" என்று திட்டவட்டமாகத்
தெரிவித்தார்.
விளையாட்டு
என்பது மனங்களை இணைக்கிற ஒரு மந்திரம். தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன்
மண்டேலா கூறியது போல, “விளையாட்டு, உலகத்தை மாற்றும் வல்லமை கொண்டது. அது
வெறுமனே ஒரு பொழுதுபோக்கல்ல; அது நம்பிக்கையையும், ஒற்றுமையையும் பேசுகிறது." அதுபோல, இந்தியா-பாகிஸ்தான் அணிகளின் வீரர்கள், போட்டிக்கு
முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பு, டாஸ் மற்றும் போட்டி
முடிவுகளிலும்கூட கைகுலுக்காமல் இருந்த நிகழ்வுகள், இந்த
அரசியல் பதட்டத்தின் ஆழத்தைக் காட்டுகிறது.
உறவுகளே, அரசியல், அதிகாரப் போட்டிகள் எல்லையற்றவை. ஆனால், விளையாட்டு
என்பது எல்லையற்ற நட்புறவைக் கட்டியெழுப்ப வேண்டும். ஆசிய கிரிக்கெட் சபையின்
தலைமைப் பதவி ஒரு அரசியல் பதவியாக பார்க்கப்படுமானால், அது
கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத்தில் கசப்பைத்தான் விதைக்கும்.
இனிவரும்
காலங்களில், விளையாட்டுத் தலைமைகள், வெறும் அரசியல் பழிவாங்கல்களைத்
தாண்டி, சமாதானத்துக்கான தூதுவர்களாகச் செயற்பட வேண்டும். விளையாட்டைக் கௌரவிக்கும் மேடையில், எந்த ஒரு
வீரருக்கும் மனவருத்தமோ, நிராகரிப்போ ஏற்படாமல், தூய விளையாட்டு உணர்வு மட்டுமே நிரம்பியிருக்க வேண்டும். அதுதான் நாம்
தேடும் நீதி!
0 comments:
Post a Comment