"நாம் வாழும் வாழ்க்கையின் பெறுமதி, நாம் எதைப் பெறுகிறோம் என்பதல்ல, நாம் எதைக் கொடுக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது." – வின்ஸ்டன் சர்ச்சில்
இந்தக் குழந்தைகளின் நிலையை அறிந்ததும், அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற என் உள்ளுணர்வு என்னைத் தூண்டியது. எனது வேண்டுகோளை ஏற்று, பாரிய நிதி மற்றும் அத்தியாவசிய உதவிகளை வழங்கி, இந்தச் சேவைக்கு முதுகெலும்பாக நின்ற சகோதரி திருமதி அம்பிகா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அவரது அளப்பரிய உதவிகள் இல்லாமல் இந்தப் பயணம் சாத்தியமாகியிருக்காது.
நாங்கள் திக்கோடை கணேஷா மகா வித்தியாலயத்திற்குச் சென்றடைந்தபோது, அங்குள்ள சூழல் மனதை நெகிழச் செய்தது. பின்தங்கிய கிராமங்களில் இருந்து வந்து கல்வி கற்கும் இந்தக் குழந்தைகள், வெள்ளத்தின் கோரப்பிடியில் சிக்கி, பல அடிப்படைத் தேவைகளுடன் போராடிக் கொண்டிருந்தனர். அவர்களுக்குத் தேவையான கற்றல் உபகரணங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை நாங்கள் வழங்கியபோது, அவர்களின் முகங்களில் பூத்த புன்னகை, என் வாழ்வில் நான் கண்ட மிக அழகான காட்சிகளில் ஒன்று. அந்தத் தருணம், என் உள்ளத்தில் என்றென்றும் நிலைத்து நிற்கும் ஒரு மகிழ்ச்சியான, அர்த்தமுள்ள தருணம்.
"நீங்கள் ஒளியின் துண்டுகளாக இருங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் அன்பு செய்யுங்கள். யாரை சந்தித்தாலும் அவர்களை நேசிங்கள்." – மேரி அலிஸ் ரெட்வுட்
உண்மையான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் என்பது இதுதான்; இத்தகைய நலிவுற்ற குழந்தைகளுக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்து, அவர்கள் வாழ்வில் ஒரு சிறிய ஒளியேற்றுவதே உண்மையான கொண்டாட்டம் என்பதை நான் ஆழமாக நம்புகிறேன். இது வெறும் ஒரு உதவித்திட்டம் மட்டுமல்ல, ஒரு சமூகத்தின் எதிர்காலத்தை வளர்த்தெடுக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்ட ஒரு முதலீடு.
யுத்தம், அனர்த்தங்கள் போன்ற காரணங்களால் மிக நலிவுற்ற நிலையில் இருக்கும் மாணவர்களை முன்னேற்றுவதே எமது இந்த உதவித் திட்டத்தின் பிரதான நோக்கமாகும். இந்தக் குழந்தைகளுக்குக் கல்வி வழிகாட்டுதல்களை வழங்கி, அவர்களை சிறந்த எதிர்காலத்தை நோக்கி வழிநடத்தவே நாங்கள் முயற்சிக்கிறோம். இதுபோன்ற மாணவர்களுக்கு உலகில் எங்கிருந்தாவது உதவ எவரும் முன்வரலாம். உண்மையான அன்பைப் பகிர்ந்து கொள்வது என்பது இத்தகைய சேவைகளின் மூலமே சாத்தியமாகும்.
இந்தச் சேவைப் பயணத்தில் எங்களோடு இணைந்து, திட்டத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பினை வழங்கிய திக்கோடை கணேஷா மகா வித்தியாலயத்தின் அதிபர் திருவாளர் A. நித்தியானந்தம் அவர்களுக்கும், சிரேஷ்ட ஆசிரியர்களான திருவாளர் ஈழவேந்தன் மற்றும் திருவாளர் கலைச்செல்வன் ஆகியோருக்கும் எனது விசேட நன்றிகள். அவர்களின் அர்ப்பணிப்புள்ள சேவைதான் இந்தக் குழந்தைகளை சரியான பாதைக்கு வழிநடத்துகிறது.
இந்தக் கிறிஸ்துமஸ் காலத்தில், நாம் அனைவரும் அன்பின் வழியில் ஒன்றிணைந்து, நம்மைச் சுற்றியுள்ள தேவையில் உள்ளவர்களுக்கு ஒளியாக மாற உறுதிபூணுவோம்.







0 comments:
Post a Comment