ADS 468x60

25 December 2025

மாமனிதர்களின் இலக்கணத்தை நமக்கு உணர்த்திய சகோதரன் பா.கமலநாதன்

 வணக்கம்! அன்பின் உறவுகளே! என் நாவில் பிறக்கின்ற சொற்கள், உங்கள் இதயத்தைத் தொடும் வல்லமை பெற வேண்டும் என்று இறைவனை வேண்டி, ஒரு நல்ல மனிதரைப் பற்றிப் பேசலாம் என நினைக்கின்றேன்.

சமூக வலைத்தளத்தின் வழியே இன்று என் கண் கண்ட காட்சியொன்று, மனதின் கதவுகளைத் தட்டிச் சென்றது; ஆழ்ந்ததொரு மகிழ்ச்சியில் என்னை ஆழ்த்தியது. ஆம், நான் நெடுநாட்களாக அறிந்த, பழகி வருகின்ற ஒரு செயல் வீரன், எமது அன்புச் சகோதரன் கமலநாதன் பாக்கியராஜா அவர்கள் குறித்த செய்திதான் அது.

அவர் பேசுவதைச் செயலில் காட்டத் துடிக்கும் ஓர் உறுதியான தலைமைத்துவப் பண்பு கொண்டவர் என்பதை நான் மிக அருகில் இருந்து அவதானித்திருக்கிறேன். அதனால் தான், கடந்த வருடம் தேத்தாத்தீவு ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தின் தலைமைத்துவப் பொறுப்பை அவர் ஏற்றபோது, அதைச் சும்மா ஒரு கடமையாகக் கருதவில்லை. அந்த ஆலயத்தை மிகச் சிறப்பாகக் கட்டி முடித்து, பரிபூரணமாகக் கும்பாபிஷேகமும் செய்து முடித்துக் காட்டினார். இது ஒரு சிறிய விடயமாக இருக்கலாம்; ஆனால், இது அவரது சங்கற்ப பலத்தைக் காட்டுகிறது.

உறவுகளே! அவரது மாண்பு, அவர் கட்டிய ஆலயங்களிலோ அல்லது அவரது வர்த்தகத்தின் உச்சத்திலோ இல்லை. அது, வாடுகின்ற மக்களுக்காக உதவி கேட்கின்ற பொழுது, அது சரியாகப் போய்ச் சேர வேண்டும் என்று மட்டும் பார்ப்பதில் தான் இருக்கிறது. 'இல்லை' என்று அவர் சொன்னதே இல்லை.

அண்மையில் அவர் என்னோடு பகிர்ந்து கொண்ட ஒரு கருத்து, மாமனிதர்களின் இலக்கணத்தை நமக்கு உணர்த்தியது. அவர் சொன்னார்: "நாம் பிறருக்கு உதவி செய்கின்ற பண்பை அதிகமாக வளர்த்துக்கொண்டு விட்டோம். ஆனால், அது என்னோடு நின்று விடக்கூடாது; அது எனது பிள்ளைகளுக்கும் பழக்கப்படுத்த வேண்டும்" என்று அவர் அடிக்கடி கூறுவார். சிந்தியுங்கள்! எவ்வளவு பெரிய மாண்பு இது! தனது தாராள சிந்தையைத் தனக்கு அடுத்த தலைமுறைக்கும் கடத்த வேண்டும் என்ற இந்த இலட்சியம், அவரைச் சாதாரண வள்ளலில் இருந்து தலைமுறையைக் காக்கும் வள்ளலாக உயர்த்துகிறது.

இன்று எமது தமிழ் மக்களுக்காக, குறிப்பாக கனடாவில் அமையவுள்ள பல்நோக்கு தமிழ் சமூக மையம் அமைப்பதற்காக ஒரு இலட்சம் டொடாலர் ($100,000.00) நிதியையும், அத்துடன் தாய்நாட்டின் மறுசீரமைப்புப் பணிகளுக்காக ஐம்பத்திரெண்டாயிரம் டொடாலர் ($52,000.00) நிதியையும் எனப் பாரிய பங்களிப்பினை வழங்கி, அந்த வள்ளல் தன் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுக்கும் இந்த உன்னதப் பணியைப் போற்றுவது, எமது கடமையேயாகும்.

"சிறந்த தலைவன் என்பவர், எதிர்காலத்தின் தேவைகளை முன்னறிந்து, அதற்காகத் தனது சந்ததியினரைத் தயார்படுத்துபவரே."

அந்த வகையில், கனடாவின் ஸ்கார்பரோ பகுதியில், தமிழ் மக்களின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் சமூகத் தேவைகளை முழுமையாக ஒருங்கிணைந்து பூர்த்தி செய்யும் நோக்குடன் உருவாக்கப்படவுள்ள பல்நோக்கு தமிழ் சமூக மையம் அமைவதற்கான நிதி திரட்டும் நிகழ்வு இன்று மாலை சிறப்பாக நடந்திருப்பது, எமது சமூகத்தின் எழுச்சியைப் பறைசாற்றுகிறது.

பிரபல தொழிலதிபரும், SQM Foundation தொண்டு அமைப்பின் ஸ்தாபகத் தலைவருமான சகோதரன் கமலநாதன் பாக்கியராஜா அவர்களின் இல்லத்தில் இந்த நற்காரியம் நடைபெற்றிருக்கிறது. அவர், ஜீவ ஊற்று அன்பின் கரம் நிறுவனத்துடன் இணைந்து இதுவரை 46 வீடுகளை நிர்மாணித்து வழங்கியிருக்கிறார். வெறும் நாற்பத்தாறு வீடுகள் அல்ல, நாற்பத்தாறு குடும்பங்களின் வாழ்க்கையில் நம்பிக்கையின் ஒளியாகத் திகழ்ந்து வருகிறார்.

கொடுக்கும் கரங்களைப் போற்றி மதிப்பது தமிழர் பண்பாடு மட்டுமல்ல; அது மனிதநேயத்தின் அடிப்படை.

அன்பின் உறவுகளே! கமலநாதன் போன்றவர்கள் எமக்குக் காட்டும் வழி என்ன? நாம் சம்பாதிப்பது நமக்காக மட்டுமல்ல; சமுதாயத்திற்கான ஒரு பங்களிப்பைச் செய்வதற்காகவும்தான்! நமது அடுத்த தலைமுறைக்கு நாம் சொத்துக்களை விட்டுச் செல்வதோடு, வள்ளல் தன்மையின் வேர்களை விட்டுச் செல்ல வேண்டும். அதுவே, இந்த தேசமும், புலம்பெயர் சமூகமும் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சினைகளுக்கான நிரந்தரமான தீர்வாகும்.

வாழ்த்துக்கள் சகோதரரே! தாங்கள் இன்னும் நிறையத் தொண்டுகள் செய்து, நற்கருமங்களை செய்து, உயர்ந்த வாழ்வைப் பெற வேண்டும் என்று இந்த மக்கள் சார்பாக, மனதார வாழ்த்துகின்றேன்! மனிதநேயச் சமூகப் பணியின் உச்சத்தைத் தொட்ட தங்களது சேவை, காலத்தால் அழியாதிருக்கும்.

நன்றி.

0 comments:

Post a Comment