உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு என்பது வணிகங்கள் தங்கள் தயாரிப்புகளைச் சந்தைப்படுத்தும் விதம், நிதியை முகாமைத்துவம் (Management) செய்யும் முறை மற்றும் வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ளும் விதத்தை அமைதியாக ஆனால் ஆழமாக மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறது. சிறு மற்றும் நடுத்தர முயற்சியாண்மைகளுக்கு, செலவுகளைக் குறைக்கவும், வினைத்திறனை அதிகரிக்கவும், புதுமையான போக்குகளை உருவாக்கவும், வேகமாக மாறிவரும் சந்தைகளில் போட்டியாக இருக்கவும் AI ஒரு பொன்னான வாய்ப்பை வழங்குகிறது. இருப்பினும், இலங்கையில் நிலைமை மிகவும் வித்தியாசமானது. சமூக ஊடகங்களில் 'சாட்போட்களை' (Chatbots) காண்பது அல்லது சர்வதேச நிறுவனங்கள் வடிவமைப்பு மற்றும் சந்தைப்படுத்தலுக்கு AI ஐப் பயன்படுத்துவதைக் கேள்விப்படுவதுடன் எமது முயற்சியாளர்கள் நின்றுவிடுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, AI என்பது எட்டாத தூரத்தில் உள்ள, சிக்கலான மற்றும் தமக்குத் தொடர்பில்லாத ஒரு விடயமாகவே உள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் உணவு மற்றும் பானங்கள், ஆடைத்தொழில் மற்றும் வாசனைத் திரவியங்கள் போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ள தகவல் தொழில்நுட்பம் சாராத (Non-IT) சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வானது இந்த முரண்பாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இவர்களின் தயக்கத்திற்கான காரணம் ஆர்வமின்மை அல்ல; மாறாக அது பயம், போதிய விழிப்புணர்வு இன்மை மற்றும் அவர்களை ஆதரிக்கக் கட்டமைக்கப்படாத ஒரு சூழலமைப்பாகும். வணிக உரிமையாளர்கள் AI பற்றி அறிய ஆர்வமாக உள்ளனர், சிலர் அதன் வாக்குறுதிகளால் உற்சாகமடைகிறார்கள். ஆனால் அவர்களின் அறிவு மேலோட்டமானது, வளங்கள் மட்டுப்படுத்தப்பட்டவை மற்றும் தொழில்நுட்பத்தால் ஏற்படக்கூடிய இடையூறுகள் குறித்த பயம் மிகவும் உண்மையானது. இந்த ஆய்வு இலங்கையின் SME களுக்கு AI இன் மகத்தான சாத்தியக்கூறுகளையும், அவற்றைப் பின்தள்ளும் தடைகளையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்துகிறது.
பூகோள ரீதியாகப் பார்க்கும்போது, ஜேர்மனி மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளில், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மீண்டும் மீண்டும் செய்யப்படும் பணிகளைத் தானியக்கமாக்கவும் (Automate), வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தவும், கூர்மையான வணிக முடிவுகளை எடுக்கவும் AI ஐ அதிகளவில் ஒருங்கிணைக்கின்றன. இந்த நாடுகளில் அரசாங்க-தொழில்துறை கூட்டாண்மைகள், வரிச் சலுகைகள் மற்றும் மானியத்துடன் கூடிய புத்தாக்கத் தளங்கள் மூலம் SME கள் பயனடைகின்றன. இதற்கு மாறாக, அரசாங்க AI தயார்நிலைக் குறியீட்டில் (Government AI Readiness Index) இலங்கை 95 வது இடத்தில் உள்ளது (Oxford Insights, 2023). இது மிகவும் கவலைக்கிடமான ஒரு புள்ளிவிவரமாகும். பெரும்பாலான உள்ளூர் SME கள் சமூக ஊடகச் சந்தைப்படுத்தல் அல்லது அடிப்படைப் இருப்பு முகாமைத்துவ அமைப்புகளைப் (Inventory Systems) பயன்படுத்துவதன் மூலம் டிஜிட்டல் கருவிகளின் மேற்பரப்பை மட்டுமே தொட்டுள்ளன. இவற்றில் பல செயல்பாடுகள் ஏற்கனவே AI ஐ உள்ளடக்கியுள்ளன என்பதை அவர்கள் உணரவில்லை. உதாரணமாக, சாட்போட்கள் மற்றும் தானியங்கி விளம்பர இலக்குப்படுத்தல் ஆகியவை எளிய டிஜிட்டல் கருவிகளாகத் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றன. உண்மையில் அவை நுழைவு நிலை AI பயன்பாடுகளாகும்.
ஆய்வின் மூலம் வெளிப்படும் மிக முக்கியமான விடயம், ஆர்வம் மற்றும் தயக்கம் கலந்த ஒரு மனநிலையாகும். வாடிக்கையாளர் விசாரணைகளுக்குப் பதிலளிப்பது அல்லது கையிருப்புகளை முகாமைத்துவம் செய்வது போன்ற நேரத்தை எடுத்துக்கொள்ளும் பணிகளை AI எவ்வாறு எளிதாக்கும் என்பதைக் கற்றுக்கொள்ளப் பல உரிமையாளர்கள் ஆர்வம் காட்டினர். மற்றவர்கள் சந்தைப் போக்குகளைக் கணிப்பது அல்லது விளம்பரங்களை மிகவும் திறம்பட வடிவமைப்பது போன்ற வாய்ப்புகளால் ஈர்க்கப்பட்டனர். ஆனால் இந்த ஆர்வத்தின் தீப்பொறிகள் நிச்சயமற்ற தன்மையால் விரைவாக அணைக்கப்படுகின்றன. சில உரிமையாளர்கள் எங்கு தொடங்குவது என்று கூடத் தெரியவில்லை என்று ஒப்புக்கொண்டனர், மற்றவர்கள் முடிவுகளைத் தருமா என்று தெரியாத தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதற்கான செலவு குறித்துக் கவலைப்படுகிறார்கள். பல செயல்முறைகள் இன்னும் மனித உழைப்பை நம்பியிருக்கும் பாரம்பரியத் தொழில்களில், தானியக்கத்தை நோக்கிய பாய்ச்சல் அச்சுறுத்துவதாகத் தோன்றுகிறது. AI பிழைகளை உருவாக்கலாம், பணிப்பாய்வுகளைச் சிக்கலாக்கலாம் அல்லது சில வேலைகளுக்கான தேவையை குறைக்கலாம் என்ற பயம் அவர்களிடத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது.
இலங்கையின் தகவல் தொழில்நுட்பம் சாராத SME களிடையே AI தழுவல் இல்லாமைக்கான முக்கிய காரணங்களை ஆராயும்போது, அறிவாற்றல் இடைவெளி (Knowledge Gap) ஒரு முக்கிய காரணியாக உருவெடுக்கிறது. பல உரிமையாளர்கள் கூகுள் ஜெமினி (Google Gemini) அல்லது சாட்ஜிபிடி (ChatGPT) போன்ற AI தளங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பதாக ஒப்புக்கொண்டனர், ஆனால் இவை தங்கள் வணிகங்களுக்கு எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பது பற்றி அவர்களுக்கு எந்த யோசனையும் இல்லை. விழிப்புணர்வுக்கும் பயன்பாட்டிற்கும் இடையில் ஒரு பாலம் இல்லாமல், AI என்பது ஒரு உறுதியான தீர்வாக இல்லாமல் ஒரு தெளிவற்ற கருத்தாக்கமாகவே உள்ளது.
அடுத்ததாக, செலவு (Cost) என்பது மற்றொரு தொடர்ச்சியான கவலையாகும். ஏற்கனவே இறுக்கமான இலாப வரம்புகளில் இயங்கும் வணிகங்களுக்கு, அறிமுகமில்லாத தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வது ஒரு சூதாட்டம் போலத் தெரிகிறது. முதலீட்டின் மீதான வருமானம் (ROI) தெளிவாகவும் உடனடியாகவும் இல்லாவிட்டால், AI க்காக விலைமதிப்பற்ற நிதியைச் செலவிடும் ஆபத்து மிக அதிகமாகத் தோன்றுகிறது. இவற்றுடன் உட்கட்டமைப்புப் பிரச்சினைகளும் சேர்கின்றன. நம்பகமான இணையம், இற்றைப்படுத்தப்பட்ட வன்பொருள் மற்றும் கிளவுட் அடிப்படையிலான அமைப்புகள், இவை AI க்கான அடிப்படைத் தேவைகள், கொழும்பில் கூடத் தொடர்ச்சியாகக் கிடைப்பதில்லை.
இச்சவால்களுக்கு மேல் ஆழமான கலாச்சார எதிர்ப்பும் உள்ளது. வணிக உரிமையாளர்கள் குழப்பமான அமைப்புகள், சாத்தியமான தவறுகள் மற்றும் ஊழியர்களின் எதிர்ப்பு குறித்துக் கவலைப்படுகிறார்கள். இடையூறு பற்றிய பயம் மற்றும் வேலை செய்யும் முறைகளின் மீதான கட்டுப்பாட்டை இழக்கும் பயம் ஆகியவை எதிர்கால வினைத்திறனின் வாக்குறுதியை விட அதிகமாக உள்ளன. மாற்றத்திற்கு எதிர்ப்பு, தொழில்நுட்பத்தின் மீதான சந்தேகம் மற்றும் மனிதனால் செய்யப்படும் செயல்முறைகளுக்கான முன்னுரிமை ஆகியவை பல சிறு வணிகங்களில் ஆழமாக உள்ளன. தங்களுக்கு முழுமையாகப் புரியாத அல்லது நம்பாத அமைப்புகளை ஏற்றுக்கொள்ள உரிமையாளர்கள் தயங்குகிறார்கள், குறிப்பாகத் தங்கள் ஊழியர்களும் புதிய கருவிகளைக் கற்றுக்கொள்வதில் கவலைப்படும்போது. ஒரு SME உரிமையாளர் கூறியது போல், "எனக்குப் புரியாத ஒன்றில் நான் ஏன் முதலீடு செய்ய வேண்டும், குறிப்பாக அது நீடிக்குமா என்று எனக்குத் தெரியாதபோது?" என்ற கேள்வி நியாயமானது.
தொழில்நுட்ப மற்றும் நிதியியல் தடைகளுக்கு அப்பால் மனித காரணி உள்ளது. நம்பிக்கை மற்றும் சகவாசிகளின் செல்வாக்கு (Peer Influence) ஆகியவை செலவு அல்லது உட்கட்டமைப்பைப் போலவே தழுவலை வடிவமைக்கின்றன. தங்கள் துறையில் உள்ள மற்றவர்கள் வெற்றிகரமாகச் செய்வதைக் கண்டால், AI உடன் பரிசோதனை செய்யத் தாங்கள் அதிகம் தயாராக இருப்பதாகப் பல உரிமையாளர்கள் சுட்டிக்காட்டினர். இலங்கையின் நெருக்கமான வணிக வலையமைப்புகளில், கொள்கை வகுப்பாளர்கள் அல்லது தொழில்நுட்ப விற்பனையாளர்களின் சுருக்கமான வாக்குறுதிகளை விடச் சகவாசிகளின் எடுத்துக்காட்டுகள் அதிக எடையைக் கொண்டுள்ளன. ஆனால் அத்தகைய எடுத்துக்காட்டுகள் அரிதாகவே உள்ளன. அரசாங்கத் திட்டங்கள் SME களுக்கான AI ஆய்வு வழக்குகளைத் (Case Studies) தீவிரமாக ஊக்குவிக்கும் சில ஆசியப் பொருளாதாரங்களைப் போலன்றி, டிஜிட்டல் மாற்றத்தைச் சுற்றிப் பரஸ்பர கற்றலுக்கான வலுவான வலையமைப்புகளை இலங்கை நிறுவவில்லை. SME துறையில் AI தழுவலின் அடிப்படையில் காணக்கூடிய வெற்றிக் கதைகள் இல்லாதது, அதை நடைமுறையை விடக் கோட்பாட்டின் எல்லைக்குள் வைத்திருக்கிறது.
விற்பனையாளர்களும் நம்பகத்தன்மை இடைவெளியை எதிர்கொள்கின்றனர். சர்வதேச AI வழங்குநர்கள் இலங்கை வணிகங்களின் குறிப்பிட்ட தேவைகளைப் புரிந்து கொள்ளவில்லை என்று பல SME கள் விரக்தியை வெளிப்படுத்தின. தொழில்நுட்பச் சொற்கள் (Technical Jargon), சிக்கலான தொகுப்புகள் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட உள்ளூர் இருப்பு ஆகியவை அவநம்பிக்கையைத் தூண்டுகின்றன. உரிமையாளர்கள் எளிமையான, மலிவு மற்றும் எளிய சிங்களம் அல்லது தமிழில் விளக்கக்கூடிய தீர்வுகளை விரும்புகிறார்கள். வெளிநாட்டிலிருந்து பொருட்களை விற்கும் தொலைதூர ஆலோசகர்கள் அல்ல, தங்களுக்கு அருகில் நின்று வழிகாட்டக்கூடிய பயிற்சியாளர்களை அவர்கள் விரும்புகிறார்கள்.
இருப்பினும், உந்துதலுக்குப் பஞ்சமில்லை. ஆய்வில் பங்கேற்ற பல வணிக உரிமையாளர்கள் AI-யால் உருவாக்கப்பட்ட வடிவமைப்புகள் அல்லது உள்ளடக்கத்தின் புதுமையால் ஈர்க்கப்பட்டதாக ஒப்புக்கொண்டனர். சிலருக்கு, அதிநவீன கருவிகளுடன் பரிசோதனை செய்வதன் மகிழ்ச்சியே மேலும் ஆராய்வதற்குப் போதுமான காரணமாக இருந்தது. அவர்களிடம் இல்லாதது ஆர்வத்தைத் திறனாக மாற்றுவதற்கான ஆதரவான சூழலாகும்.
இலங்கை ஏன் காத்திருக்க முடியாது? SME களுக்கு AI பொருத்தமானதா என்ற கேள்வியை எழுப்புவதில் அர்த்தமில்லை, ஏனெனில் அது மறுக்க முடியாதது. உலகளாவிய போட்டியாளர்கள் தங்கள் செயல்பாடுகளின் மிகச்சிறிய அம்சங்களில் கூட AI ஐ ஒருங்கிணைத்து வரும் நிலையில், இலங்கை SME கள் பின்தங்கியிருப்பதைத் தாங்கிக்கொள்ள முடியுமா என்பதே உண்மையான கேள்வியாகும். இலங்கை தனது SME கள் போட்டியாக இருக்க விரும்பினால், AI தழுவலை ஊக்குவிக்க ஒரு ஆதரவான சூழலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதை இந்த ஆய்வு தெளிவுபடுத்துகிறது.
ஒரு கொள்கை வகுப்பாளராக நான் முன்வைக்கும் நடைமுறைத் தீர்வுகள் மற்றும் பரிந்துரைகள் பின்வருமாறு:
துறைசார்ந்த எழுத்தறிவு (Sector-Specific Literacy): விழிப்புணர்வு என்பது தெளிவற்ற அறிவுக்கு அப்பால் சென்று துறை சார்ந்த எழுத்தறிவாக மொழிபெயர்க்கப்பட வேண்டும். ஆடை உற்பத்தி அல்லது உணவு உற்பத்தி போன்ற தொழில்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட நேரடிச் செயல் விளக்கங்களுடன், சிங்களம் மற்றும் தமிழில் வழங்கப்படும் பயிற்சித் திட்டங்கள் தொழில்நுட்பத்தின் மீதான மர்மத்தை விலக்க உதவும்.
நிதியியல் ஊக்குவிப்புகள்: AI உடன் பரிசோதனை செய்ய விரும்பும் SME களுக்கு இலக்கு வைக்கப்பட்ட மானியங்கள், அல்லது வரிச் சலுகைகள் நிதியியல் இடர் பற்றிய பயத்தைக் குறைக்கலாம்.
உள்ளூர் வெற்றிக் கதைகளை உருவாக்குதல்: நேரத்தைச் சேமிக்க, வாடிக்கையாளர்களை ஈர்க்க அல்லது இலாபத்தை அதிகரிக்க AI ஐப் பயன்படுத்திய சிறு வணிகங்களின் உண்மையான உதாரணங்களை வெளிப்படுத்துவது சமமாக முக்கியமானது. இந்தக் கதைகள் AI என்பது பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, இலங்கையின் சொந்தத் தொழில் முயற்சியாளர்களுக்கும் உரியது என்பதற்கான ஆதாரமாக அமைய வேண்டும்.
டிஜிட்டல் விரிவாக்கச் சேவைகள்: விவசாயத் திணைக்களம் விவசாயிகளுக்கு விரிவாக்கச் சேவைகளை வழங்குவது போல, சிறு தொழில்களுக்குத் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்க "டிஜிட்டல் விரிவாக்க அதிகாரிகளை" அரசாங்கம் அல்லது வர்த்தகச் சபைகள் நியமிக்க வேண்டும்.
இலங்கையின் SME கள் அளவில் சிறியதாக இருக்கலாம், ஆனால் பொருளாதாரத்தில் அவற்றின் தாக்கம் மிகப்பெரியது. அவை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) பாதிக்கும் மேலானதைத் தூண்டுகின்றன மற்றும் உழைக்கும் மக்களில் கிட்டத்தட்டப் பாதியை வேலைக்கு அமர்த்துகின்றன (Central Bank of Sri Lanka Annual Report, 2023). AI யுகத்தில் செழித்து வளர அவர்களுக்குக் கருவிகளை வழங்குவது ஒரு விருப்பத்தேர்வு மட்டுமல்ல; அது தேசத்தின் எதிர்காலத்திற்கான அவசியமாகும். வாய்ப்பு தெளிவாக உள்ளது, ஆர்வம் உள்ளது, தொழில்நுட்பம் காத்திருக்கிறது. எஞ்சியிருப்பது செயல்படுவதற்கான விருப்பம் மட்டுமே. இலங்கையின் SME கள் AI புரட்சியின் விளிம்பில் நிற்கின்றன. அவர்களுக்கு முன்னால் உள்ள தேர்வு எளிமையானது: அது கடந்து செல்வதை வேடிக்கை பார்ப்பது அல்லது ஏற்கனவே வேறிடத்தில் விரிவடைந்து கொண்டிருக்கும் எதிர்காலத்தைத் தன்வசப்படுத்த முன்வருவது.
மேற்கோள்கள் (References):
Oxford Insights (2023). Government AI Readiness Index 2023. Oxford: Oxford Insights.
Central Bank of Sri Lanka (2023). Annual Report 2023. Colombo: CBSL.
Department of Census and Statistics (2022). Survey on Construction, Trade and Services. Colombo: DCS.
International Finance Corporation (IFC) (2024). AI for SMEs: Opportunities and Challenges in Emerging Markets. Washington D.C.: IFC.


0 comments:
Post a Comment